Monday, July 28, 2008

தமிழிசை - அன்றும் இன்றும் - முனைவர் இரா. திருமுருகன்

2. ஒரே ஒத்தில் இசைத்தல் :தமிழிசையில் ஓர் இசை நிகழ்ச்சியின் தொடக்க முதல் முடிவு வரையில் ஓரே அடிமணை (ஆதார சுருதி) யில் நின்று இசைப்பார்கள். அந்த அடிமணை நரம்பு 'ஒத்து' எனப்படும். ச என்னும் குரல் நரம்பு அடிமணையாகக் கொள்ளப்படும். ஒரே நிலையில் நின்று இசைப்பதால் அதனைக் கேட்போர் மனம் ஒருநிலைப்படுகிறது. அதனால் ஒத்தினை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் வழக்கம் தமிழி சையில் இல்லை. ஆனால் மேனாட்டிசையில் ஒரு நிகழ்ச்சியில் பலமுறை ஒத்தினை மாற்றிக் கொள்வது இயல்பாக உள்ளது.
3. நுண்ணலகு முறை :தென்னக இசையில் 22 அலகு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இவற்றின் மேலும் சில நுண்ணலகுகள் உண்டு. இம்முறைதான் தமிழிசையில் பண்கள் நுட்பமாக வேறுபட்ட நிறங்களைப் படைத்து வேறுபட்ட உணர்வுகளை உண்டாக்க உறுதுணையாக உள்ளது. ஆனால் மேனாட்டிசையில் 12 நரம்பிடங்கள் (சுரத்தானங்கள்) மட்டுமே கொள்ளப்படுகின்றன. மேலும் படிக்க

விடுதலைப் போருக்கு வித்திட்ட பூலித்தேவன் செப்பேடு

இந்தியாவிலேயே முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன். வரி பெறுவதற்கு வந்த அலெக்சாந்தர் கெரான் என்பவனோடு 1755இல் பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில் கிழக்கிந்தியக் குழுமத்துக்கு எதிரான முதல் பேராகும்.
பூலித்தேவன் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அச்செப்பேடு 27 செ.மீ. நீளமும் 15 செ.மீ. அகலமும் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அச்செப்பேட்டில் ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் எழுதப்பட்டுள்ளன. அச்செப்பேட்டை ஈரோடு கொங்கு ஆய்வு நடுவ ஆய்வாளர் புலவர் இராசு ஆய்வுசெய்து பின்வரும் செய்திகளைத் தெரிவித்துள்ளார்.
அதாவது, சேரநாட்டின் ஒரு பகுதியான பூழிநாட்டை ஆண்ட பாண்டியனுக்கு உட்பட்டு ஆட்சி புரிந்ததால் பூழித்தேவன் என்ற பெயர் பூலித்தேவன் என அழைக்கப்பட்டதென்றும். அவர் முழுப்பெயர் காத்தப்ப பூலித்தேவன் என்றும் ஆய்வாளர் ந. இராசையா கூறியுள்ளார். 1748ஆம் ஆண்டு இச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது. நெற்கட்டுச் செவ்வலில் கோட்டை கட்டி அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் பூலித்தேவன். நெற்கட்டுச் செவ்வலில் இராமகோவிந்தப்பேரி என்ற பெயரில் பெரிய குளம் இருந்தது. அக்குளம் உடைந்து சிதைந்து பல ஆண்டுகள் பாசனம் இல்லாமல் இருந்தது. அதைச் சரி செய்யப் பூலித்தேவன் கேட்டுக் கொண்டதனால் நெற்கட்டுச் செவ்வலில் உள்ள பிறக்குடையாக் குடும்பன் என்பவர் தன் செலவில் இராமகோவிந்தபேரிக் குளத்தைப் புதுக்குளமாக அமைத்தார். அதற்குப் பதிலாக விபவ ஆண்டு ஆடி மாதம் 25ஆம் நாள் பூலித்தேவன் பிறக்குடையாக் குடும்பனுக்கு மானியபூமி நன்செய் நிலம் வழங்கியதோடு அவர் நிலங்களுக்குச் சில ஆண்டுகள் வரிச் சலுகையும் அளித்த விவரம் இந்தச் செப்பேட்டில் உள்ளது.
குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதன் மூலம் வருகின்ற வருவாயில் இருந்து குளம் பேணிக்காப்பும், தூர் வாருதலும் நடைபெற வேண்டும் என்றும், இவற்றிற்குக் கணக்கெழுதி ஒப்புவிக்க வேண்டும் என்றும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலங்கள் அளக்கப்பட்டு அடையாளமாக அவற்றிற்கு எண்கள் இடப்பட்டுள்ளன. 85,86,87,88 ஆம் எண் நிலங்கள் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக அக்காலச் செப்பேட்டில் வழக்கமாக இருக்கும் வடமொழிச் சொற்கள் இன்றித் தனித்தமிழில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது. விடுதலைப் போரை முதலில் தொடங்கிய பூலித்தேவனைப் பற்றி அரிய செய்திகளைக் கூறும் இச்செப்பேடு வரலாற்று முதன்மை வாய்ந்தது என்று புலவர் செ. இராசு கூறுகிறார்.- நன்றி. தமிழோசை, 6-7-௨00௮

http://www.thelithamizh.com

ஆறுமுகச்சாமி ஓதுவார் மீது தீட்சிதர்கள் மீண்டும் தாக்கு

சிதம்பரம் நடராசர் கோயில் நேற்று முன்நாள் இரவு சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடச் சென்ற ஓதுவார் ஆறுமுகசாமியுடன் 5க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் சிற்றம் பல மேடையில் சென்று பாட வேண்டும் என்றால் முறையே ஒவ்வொருவரும் ரூ. 100 தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதற்கு ஆறுமுகச்சாமி, "சிற்றம்பல மேடையில் ஏறிக் கடவுளைப் பற்றித் தேவாரம், திருவாசகம் பாடுவதற்குப் பணம் பெறக்கூடாது என்று அரசின் ஆணை உள்ளது. முதலமைச்சர் கலைஞரும் தெரிவித் துள்ளார். அப்படியிருக்கும்போது பாடுவதற்காக ஏன் பணம் கேட்கிறீர்கள்? இவ்வாறு பணம் கேட்பதால்தான் ஒருவரும் பாட வருவதில்லை" என்று தீட்சிதர்களிடம் தெரிவித்தார். அதற்குத் தீட்சிதர்கள், "உங்களுக்கு மட்டும்தான் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதற்கு இசைவளிக்க முடியும். ஆனால் மற்றவர்கள் பாடுவதற்கு இசைவளிக்க முடியாது. அப்படிப் பாட வேண்டும் என்றால் பணம் செலுத்தி விட்டுப்பாடிக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தீட்சிதர்களுக்கும், ஓதுவார் ஆறுமுகச்சாமிக்கும் இடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. அப்போது தீட்சிதர்கள் ஒன்றுகூடி அரசின் ஆணையைக் கிண்டல் செய்துள்ளனர். மேலும் சினமடைந்த தீட்சிதர்கள் 2 பேர் ஆறுமுகச்சாமியின் தோள்பட்டையில் தாக்கியுள்ளனர். மேலும் 2 பேர் எட்டி உதைத் துள்ளனர். - (நன்றி : தமிழ் ஓசை 8 சூலை 2008)

http://www.thelithamizh.com

தொல்காப்பியத்துட் கண்ட செவிலித்தாய் பற்றிய குறிப்புகள் - புலவர் தி. சா. கங்காதரன்.

செவிலி, பரம்பரையாகத் தலைவியயாடு பிரிவின்றி இயைந்த தொடர்பு கொண்டவள், செவிலி தலைவிக்கு வளர்ப்புத்தாயாக இருக்கும்போது, செவிலிமகள் தலைவிக்கு உயிர்த்தோழியாயிருப்பாள். இத்தோழி பின்னர்த் தலைவியின் மகட்குச் செவிலியாகுமிடத்து. அவள்மகள் தலைவியுடைய மகட்குத் தோழியாவாள். இவ்வாறு பரம்பரையாக வரும் சிறப்புக் காரணத்தான், தலைவியின் களவொழுக்கச் செய்தியைக் குறிப்பானன்றிக் கூற்றினான் நற்றாய்க்குக் கூறுதற்கு உரிமையுடைய செவிலியே 'தாய்' என்று சிறப்பித்துச் சொல்லப்படுவாள். தலைவியைப் பயந்த தாயை 'நற்றாய்' என்று அடைகொடுத்தே குறிப்பிடல் வேண்டும். வாளா 'தாய்' என்று சுட்டின், அச்சொல் செலிலித்தாயையே குறிக்கும்.

'ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின்
தாயயனப் படுவோள் செவிலி ஆகும்' (124)

செவிலி தலைவியின் களவொழுக்கத்தை வெளியிட நேரிடையாக நற்றாய்க்கே அறத்தொடுநிற்பாள். 'தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும்' (138) தலைவி தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்டவழி, அவளைத் தேடிக்கொண்டு செவிலி அருவழிக்கண் தந்தையும் தன்னையரும் உணராமுன் எதிர்ப்பட்டு மீட்டற்குச் செல்வாள். மேலும் படிக்க

தமிழ் இளைஞரின் தமிழறிவின்மை - ம.இலெ.தங்கப்பா

இன்று மேனிலைப் பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் தேர்ச்சிபெற்று வெளியே வரும் தமிழ் இளைஞர்களின் தமிழ்மொழி அறிவும் தமிழிலக்கிய அறிவும் மிகமிகக் கீழ் நிலையிலேயே உள்ளன. அவர்கள் என்ன பாடங்களை வேண்டுமானாலும் படிக்கட்டும்; ஆனால் சொந்தத் தாய்மொழியைப் பிழை யில்லாமல் எழுத அவர்கட்குத் தெரிந்திருக்க வேண்டும். தங்கள் முன்னோர்களின் இலக்கியங்களைப் பற்றியும் அவர்கட்கு அடிப்படை அறிவாவது கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். இது மிகமிக அடிப்படை யான கல்வியாகும்.

தங்கள் சொந்த மொழியைப் பிழையற எழுதப்படிக்கத் தெரியாமலிருப்பதும், தங்கள் இலக்கியம் பண்பாடு பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமலிருப்பதும் எவ்வளவு வெட்கப்படத்தக்க நிலை என்பதைக்கூட அவர்கள் உணராமலிருக்கின்றனர்.

ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பது கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும். அது ஒரு புறம் இருக்கட்டும். நடப்பு நிலையில் இன்றும் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்து வருகின்றது. மேலும் ஆங்கிலம் ஒரு கட்டாயப் பாடமாகவும் கற்பிக்கப்பட்டுவருகின்றது. ஆனால் இந்த இரண்டையும் தலைக்கீடாகக் கொண்டு தமிழ் மாணவர்க்குப் போதிய தமிழறிவு வழங்கப்படாதிருப்பது சற்றும் பொருந்தாதது மட்டுமன்று. மிகவும் நாணத் தக்கதுமாகும்.

வெள்ளையன் ஆண்டகாலத்தில் கூட, வெள்ளையனின் கல்விமுறைக்கு நாம் அடிமையாக இருந்தபொழுது கூட, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களின் தமிழறிவும் தமிழ் இலக்கிய அறிவும் மிகமிக உயர்ந்த நிலையில் இருந்தன என்பது இன்று எழுபது அகவை தாண்டியிருக்கும் பலரும் தங்கள் சொந்தப் பட்டறிவினால் தெரிந்து கூறும் செய்தியாகும்.

அப்படியிருக்கத் தமிழரைத் தமிழரே ஆளும் இன்றையச் சூழ்நிலையில் தமிழ்க்கல்வி மிக மிக மட்டமாகப் போயிருப்பது ஏன்? இத்தகைய இழிநிலைக்கு யார் பொறுப்பு? இன்றைய ஆட்சியாளரும் கல்வியாளருமே பொறுப்பு என்பதை யார் மறுக்க முடியும்?

மேற்கூறிய இருசாராருக்குமே தமிழ்க்கல்வியில் சிறிதளவும் அக்கறையில்லை. தமிழிலக்கியத்திலும் பண்பாட்டிலும் கடுகளவு ஈடுபாடும் அவர்கட்கு இல்லை: கல்வி என்றால் என்ன என்பதே இவர்கட்குத் தெரியவில்லை.

வெள்ளைக்காரன் காலத்தில், ஆட்சி அலுவலகங்களில் அலுவலர்களாகவும் எழுத்தர்களாகவும் அலுவல் பார்க்க ஆங்கிலமறிந்தவர்கள் தேவை என்பதற்காகத்தான் மெக்காலே கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அலுவல் பார்ப்பது கல்வியின் ஒரு நோக்கமாக இருந்தாலும் கூட, முழுக்கல்வியும் அந்த வழியிலேயே போய்விடவில்லை. ஏட்டுக்கல்வியோடு கூடப் பண்பாட்டுக் கல்வியும் ஒழுக்கக் கல்வியும் குழைத்தூட்டப்பட்டன. வெள்ளைக்காரன் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தான். அதனால் அவன் அமைத்த பாடத்திட்டத்தில் தாய்மொழிக் கல்விக்கும் தாய்மொழி இலக்கியக் கல்விக்கும் போதிய இடம் வழங்கப்பட்டிருந்தது. படித்துவந்த இளைஞர்கள் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டிருந்தபோதிலும், ஆங்கில மொழியைக் கட்டாய மொழியாகக் கற்றுவந்த போதிலும் தமிழையும் அவர்கள் ஆர்வத்துடன் கற்றனர். தமிழ்மீது தங்கள் தாய்மொழி என்ற மதிப்பு அவர்கட்கு இருந்தது. தமிழாசிரியர்களும் மிகுந்த ஆர்வத்தோடும் அக்கறையோடும் தமிழைக் கற்பித்தனர். தமிழ் இலக்கிய ஆர்வத்தை மாணவர்கட்கு ஊட்டினர். தங்கள் பண்பாட்டுச் செழுமையை இளைஞர்களுக்கு உணத்தினர்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வெள்ளைக்காரன் காலத்தில் இருத்ததைவிட இன்று பலருக்கு ஆங்கில வெறி தலைக்கேறி உள்ளது. ஆங்கில மொழியின் தேவை பயன்பாடு பற்றிய தவறான பார்வை, குருட்டுத் தனமான ஆங்கிலப்பற்று, தாய்மொழியாகிய தமிழ் பற்றிய புறக்கணிப்புணர்வு முதலியன மிகுந்துள்ளன. பண்பாட்டைப்பற்றியோ ஒழுக்கத்தைப்பற்றியோ நம் ஆட்சியாளரும் சரி, அவர்கட்கு வால் குழைக்கும் கல்வியாளரும் சரி கடுகளவும் அக்கறை கொள்ளவில்லை. அன்று கல்வியின் ஒரு பகுதியாக இருந்த வேலைவாய்ப்பு நோக்கம் இன்று பலமடங்கு பெருகிக் கல்வியின் நோக்கமே அலுவல் பார்ப்பதுதான் என்ற உணர்வு இளைஞரிடம் தலைதூக்கியிருக்கின்றது.

அன்று அலுவல் பார்த்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் தொழிலாக அதனை மேற்கொண்டிருந்தனர். பொருளீட்டுதல் ஊதியம் பெறுதல் என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக மட்டுமே இருந்தது.

இன்று அளவுமீறிய பொருள் வெறி இளைஞரைப் பிடித்தாட்டத் தொடங்கிவிட்டது. அன்று வாழ்க்கையை நன்கு வாழ்வதற்குப் பொருள் தேவை என்று மக்கள் கருதினர். வாழ்க்கைக்காகப் பொருள்ஈட்டல் என்ற நிலை அன்றிருந்தது. இன்றோ பொருள் ஈட்டுதலுக்காகவே வாழ்க்கை என்ற பிழைக்கோட்பாடு எல்லோரையும் பிடித்தாட்டத் தொங்கிவிட்டது.

கடுகளவு அரசியல் அறிவும் மக்கள் நேயமும் அற்றபொருட் குறிக்கயவர்களே அரசியலில் புகுந்து ஆட்சியாளராகி விடுவதால் பொருட் குறிக் கல்வியையே அவர்கள் முன்வைக்கின்றனர். பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றபடி, கல்வியாளரும் இப்போலிக் கல்வியையே இளைஞர்க்கு வழங்கு கின்றனர். தாய்மொழி அறிவை வளர்க்க இவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. இலக்கியம், பண்பாடு, மக்களன்பு பிற நல்லியல்புகள் எவை பற்றியும் கல்வித்திட்டங்கள் கவலைப்படுவதில்லை. தாய்மொழிக் கல்வி தேவையற்ற ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் விளைவாகத்தான் தமிழ் இளைஞன் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் அடிப்படை அறிவுகூட இல்லாமலேயே கல்லூரியைவிட்டு வெளியே வருகின்றான்.

http://www.thelithamizh.com/headings.html